சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட புண்களை அறுவை சிகிச்சை இன்றி விரைவில் குணமாக்கும் ‘ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி’ என்ற புதிய சிகிச்சை முறை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள ஆக்ஸிமெட் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்த சிகிச்சை முறை நோயாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஹியுமா மருத்துவமனையின் தலைவர் ஹிசாமுதின் பாபா, அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் ரபீக் அகமது, தேசிய மருந்து வழங்கல் துறை முதன்மை செயலர் வி.கே.சுப்புராஜ், ஆக்ஸிமெட் மருத்துவமனை தலைவர் அயாஸ் அக்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய சிகிச்சை முறை குறித்து ஆக்ஸிமெட் மருத்துவமனையின் தலைவர் அயாஸ் அக்பர் அவர்கள் கூறியபோது, “ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி சுற்றுபுறத்தின் அழுத்தத்தை அதிகரித்து தூய்மையான ஆக்ஸிஜனை சுவாசிக்கச் செய்வதாகும் என்றும் தூய்மையான ஆக்ஸிஜன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் நீர்மத்திசுவின் செயல்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, திசுக்களும் புதுப்பிக்கப்படுகிறது என அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி திசுக்கள் அழியாமலும் பாதுகாக்கப்பட்டு, பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிராகவும் செயல்புரிகிறது.
சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி ஹைப்பர்பேரிக் ஆக்ஸிஜன் தெரப்பி சிகிச்சை மூலம் கதிர்வீச்சினால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், நோய்த்தொற்றுகள், விபத்துக் காயங்கள் ஆகியவற்றையும் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.
English Summary : The introduction of a new treatment for diabetic patients