சென்னை நகரில் உள்ளவர்களிடம் மர்ம மனிதன் ஒருவன் ஏ.டி.எம் கார்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அவர்களிடம் இருந்து 16 இலக்க ஏ.டி.எம். கார்டின் எண்களை வாங்கி, நூதன மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வந்தால் யாரும் தங்கள் ஏ.டி.எம். கார்டு எண்களையும் பின் நம்பரையும் கூற வேண்டாம் என சென்னை நகர மக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நேற்று சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்கொண்ட மர்ம மனிதன் ஒருவன், அவருடைய ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றும், அதனால் 16 இலக்க எண்ணை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளான். ஆனால் இதுகுறித்து சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் 16 இலக்க எண்ணை கொடுக்க மறுத்தார். ஆனால் அவ்வாறு கொடுக்க மறுத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் ஏ.டி.எம். கார்டு ரத்து செய்யப்படும் என அந்த மர்ம மனிதன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற மோசடியால் ஒருசிலர் பணத்தை இழந்துள்ளதாகவும், எனவே ஏ.டி.எம். கார்டு குறித்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்களிடம் கார்டு குறித்த விவரங்கள் மற்றும் ரகசிய எண்களை தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த மர்ம ஆசாமியையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

English Summary : Mystery man calls and asks for ATM card details to update and then he use the details to rob. Police warned not to give any information over phone calls.