கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 48வது நாளாக ஊரடங்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கான ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து நேற்றுமுன்தினம் ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கியது.
மாலை 4மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அநேகம் பேர் பார்வையிட்டதால் இணையதளம் முடக்கப்பட்டது. மறுபடியும் மாலை 6 மணிக்கு மீண்டும் முன்பதிவு தொடங்கியது.
பயணம் செய்ய விரும்பும் நபர்கள் 7 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆர்ஏசி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யப்படமாட்டாது.
பயணம் செய்வோர் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். தங்களுக்குத் தேவையான போர்வைகள், உணவு, குடிநீர் போன்றவற்றை பயணிகளே எடுத்து வர வேண்டும்.
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்பட 24 மணி நேரம் முன்பு வரை ரத்து செய்து கொள்ளலாம். டிக்கெட் ரத்துக் கட்டணமாக 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். ரயில் நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாகவே பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.