சென்னை: சென்ட்ரல் மெட்ரோ நிலையம், பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நிலையங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது. நிலைய பிளாட்பார ஏரியா, 32 மீட்டர் அகலத்திலும், பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில், முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1, 2, 3 மற்றும் 4வது நடைமேடைகளில் இருந்து, பரங்கிமலைக்கும், 5வது நடை மேடையில் இருந்து, விமான நிலையத்துக்கும், 6 மற்றும் 8வது நடைமேடைகளில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
7வது நடைமேடை, அவசரத்துக்கு ரயில் நிறத்தி வைக்கவும், இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், சென்ட்ரலும், ஆலந்துார் நிலையமும், ரயில்கள் இருவழிகளில் கடந்து செல்லும் நிலையங்களாக உள்ளன. இந்நிலையங்களில், பயணியருக்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுவதற்கு, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.