medicalclgதற்கால மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் தவிர பல்வேறு புதியவகை படிப்புகள் அவ்வபோது அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் பலர் இந்த புதிய படிப்புகளில் சேர்ந்து கல்வி பெற்று நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின்மை சிகிச்சை குறித்த ஓராண்டு ஃபெலோஷிப் என்ற படிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியுள்ளார். இந்த புதிய படிப்பு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ் முடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்த புதிய ஃபெலோஷிப் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படிப்பில் செயற்கை கருத்தரிப்பு உள்பட குழந்தையின்மைக்கு அளிக்கக்கூடிய சிகிச்சைகள் குறித்து கற்றுத்தரப்படும்.

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள், கர்ப்பப் பை மாற்று சிகிச்சை குறித்த 5வது தேசிய மருத்துவ மாநாட்டு நேற்று சென்னையில் நடைபெற்றது. ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:

“பரபரப்பான வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தை இல்லாதோரில், 70 சதவீதம் பேர் இயல்பான சிகிச்சை முறைகளில் குழந்தைப் பேறு அடைய முடிகிறது. மீதமுள்ள 30 சதவீதம் பேர்தான் குழந்தைப் பேறு அடைவதில் சிரமம் உள்ளது. அத்தகைய 30 சதவீதம் பேருக்கும் நவீன குழந்தையின்மை சிகிச்சை முறைகள் மூலம் குழந்தைப் பேறை அளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ அறிவியலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை இல்லாத பெண்களுக்கு உதவும் வகையில் நவீன மைக்ரோ அறுவைச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கருக்குழாயில் அடைப்பு இருந்தால், அதை அகற்றும் சிறப்பு சிகிச்சை மையமாக இது கடந்த பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை உலக சுகாதார நிறுவனமும் அங்கீகரித்துள்ளது. மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளுக்கு ஈட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் அரசு மகளிர்-மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் முதல் கட்டமாக குழந்தையின்மை சிகிச்சை குறித்த ஓராண்டு ஃபெலோஷிப் படிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பிற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்தப் படிப்பு படிப்படியாகக் கொண்டு வரப்படும். செயற்கை கருத்தரிப்பு உள்பட குழந்தையின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகள் இந்த ஓராண்டு பாடத் திட்டத்தில் இடம்பெறும். எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பலன் அடைய முடியும். எழும்பூர் அரசு மகளிர்-மகப்பேறு மருத்துவமனையில் குழந்தையின்மை சிகிச்சை, மயக்க மருத்துவம் உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே 6 மாத பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” இவ்வாறு டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியுள்ளார்.

இந்த மாநாட்டில் அகில இந்திய மகளிர்-மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஹிரிஷிகேஷ் டி பாய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி வழங்கினார். ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் காமராஜ், டாக்டர் ஜெயராணி காமராஜ், எழும்பூர் அரசு மகளிர்-மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பேபி வசுமதி, பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகளிர்-மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் கே.சரஸ்வதி, டாக்டர் கே.ருக்மிணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

English Summary:The new study for the treatment of childlessness. Medical Education Director Announcement