சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்த வேண்டியவர்கள், குறிப்பாக பெரிய நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நூதன திட்டமான ‘தண்டோரா’ போடும் நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2015-16ஆம் ஆண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பல பெரிய நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர்களுக்கு முறைப்படி நோட்டீசு வழங்கி நினைவூட்டப்பட்டது. ஆனாலும் அந்த நிறுவனங்கள் இன்னும் சொத்துவரி செலுத்தாமல் காலம் கடத்தி வருகின்றன. எனவே இதுபோன்ற நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூல் செய்ய தண்டோரா போட்டு நூதன முறையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது அதன்படி நேற்று முதல் கட்டமாக அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள 2 ஓட்டல்கள் மற்றும் ஒரு நிறுவனம் முன்பு தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.
பின்னர் அவற்றின் முன்பக்க சுவரில் நோட்டீசு ஒட்டப்பட்டது. அதில், “இன்னும் 72 மணி நேரத்தல் சொத்துவரி செலுத்தாவிட்டபால் நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஜெகநாதன், ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நோட்டீசு ஒட்டப்பட்டுள்ள 2 ஓட்டல்கள் தங்களது சொத்து வரியை அதிகாரிகளிடம் உடனடியாக செலுத்தினர். ஒரு ஓட்டல் ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தையும், மற்றொரு ஓட்டல் ரூ.10 லட்சத்து 35 ஆயிரத்தையும் வழங்கினர். அதே நேரத்தில் நோட்டீசு ஒட்டப்பட்ட நிறுவனம் மட்டும் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. தண்டோரா நடவடிக்கைக்கு உடனுக்குடன் பலன் இருப்பதால் தொடர்ந்து இந்த முறையை செயல்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
English summary: The plan to charge property Tax.Chennai Corporation’s announced.