Rajesh-lakkaniதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறுவதை அடுத்து அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு விடுமுறை கிடைப்பதால் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் 21.03.2016 வரை பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 1,48,390 புகார்களும், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக 440,95 புகார்களும் பெறப்பட்டன. சுவர்களில் எழுதியது தொடர்பாக வந்த 1,01,206 புகார்கள் சுவரில் எழுதியதை அழித்து விட்டதால் முடிவுக்கு வந்தன. பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக 887 வழக்குகளும், தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தாக 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் தவறாக வாகனத்தை பயன்படுத்தியதால் 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நாளான 16.05.2016 அன்று அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கவேண்டும். தேர்தல் நாளில் விடுமுறை வழங்கப்படுவதால் நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க உறுதி கொள்ள வேண்டும்.

வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது தொடங்கப்பட்டு இக்குறுகிய நாட்களில் இதுவரை 38 ஆயிரம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளில் வரும் தேர்தல் செய்திகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேர்தல் பணியாற்ற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

English Summary: Holidays with pay on election day. Rajesh lakkani election official information.