passport1
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் மீது ஏதாவது கிரிமினல் வழக்குகள் இருக்கிறதா என்பதை அறிய அவர்களது விண்ணப்ப நகல்கள், காவல்துறையினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இந்த விண்ணப்பங்களை சரி பார்த்து அதற்குரிய சான்றிதழ்கள் வழங்குவதற்காக காவல்துறையில் தனியாக ‘‘பாஸ்போர்ட் பிரிவு’’ ஒன்று செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்திலும், மாநகர போலீஸ் தலைமையகங்களில் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு உளவுப்பிரிவின் கீழ் இயங்குகிறது.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று உளவு பிரிவு போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவதோடு, அவர்கள் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் அவர்கள் மீது வழக்குகள் ஏதும் உள்ளதா? என்று விசாரணை நடத்தி அதன்பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கை அளிப்பார்கள். சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத பட்சத்தில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க காவல்துறையினர் பரிந்துரை செய்வார்கள். இதன் பின்னரே விண்ணப்பம் செய்தவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கும்

இந்நிலையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு நேரடியாக விசாரணை செய்வதில் சிரமங்களும், கால தாமதமமும் ஏற்படுகிறது. எனவே இந்த பணிகளை எளிமையாக்கும் வகையில் பாஸ்போர்ட் விசாரணைகள் அனைத்தையுமே ஆன் லைனிலே செய்து முடிக்க மத்திய அரசு தற்போது அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் தேசிய மக்கள் தொகை பட்டியல், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் புதிய சர்வர் ஒன்று தொடங்கப்பட உள்ளது. குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை ஆன்லைனிலேயே கண்டறிய கிரைம் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் என்ற பெயரில் புதிய முறையும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக பாஸ்போர்ட் விசாரணையை போலீசார் இருந்த இடத்தில் இருந்தே முடித்து விட முடியும்.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலுமே இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இப்பணிகளை செய்து வருகிறார்கள். வரும் நவம்பர் மாதம் முதல் ஆன் லைன் மூலமாக போலீசார் பாஸ்போர்ட் விவரங்களை சரிபார்க்கும் பணியை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நேரடியாக சென்று போலீசார் பாஸ்போர்ட் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவதால் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. 7 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரையிலும் இதற்காக பொது மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இருந்து வருகிறது. ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஒரே நாளில் இந்த விசாரணை முடிந்துவிடும்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரைப்படி விரைவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆன்லைனில் பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் திட்டம் அமலுக்கு வந்த பின்னர், பாஸ்போர்ட் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர், கம்ப்யூட்டரை தட்டினாலே போதும். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் போட்டோ உள்ளிட்ட அனைத்து விவரங்களுமே அவரது விரல் நுனிக்கு வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:The police investigation of the passport online . The new plan into effect soon