தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் 7 செமீ மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செமீ மழை பெய்துள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செமீ மழை பதிவாகி உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: ‘‘வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.
சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 20ம் தேதியுட்ன் தெற்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும். அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்’’ எனக்கூறினார்.