சென்னை: கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், 5 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், கோடை வெயில் காலம், இந்த மாதம் துவங்கியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் மிதமாக இருந்த வெயில், இந்த வாரம் கடுமையாக அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், பகலில் கடற்காற்று வீசுவதால், வெயிலின் உக்கிரம் மிதமாக உள்ளது. ஆனால், மலைப் பகுதி மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை, வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் உட்பட, 11 மாவட்டங்களில், நேற்று அனல் காற்று வீசியது. இன்றும், இந்த நிலை தொடரும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.’இன்றைய வானிலையை பொறுத்தவரை, சென்னை உட்பட, 13 மாவட்டங்களில், இயல்பான அளவை விட, 5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு, வெயில் கொளுத்தும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், தர்மபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு, இந்த எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுாரில், 41 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இது, பாரன்ஹீட்டில், 106 என, கணக்கிடப்பட்டுள்ளது.
திருத்தணி, கரூர் பரமத்தி, தர்மபுரி, மதுரை, சேலம், திருச்சி ஆகிய நகரங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் கொளுத்தியது. சென்னை விமான நிலையம், 37; நுங்கம்பாக்கம், 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் நிலவியது.
தமிழகத்தில், குறைந்த பட்சமாக, கொடைக்கானல், 22; குன்னுார், 26 டிகிரி செல்ஷியஸ் மற்றும் புதுச்சேரியில், 33 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. கோடை வெயில் அதிகரித்துள்ளதால், நாளை முதல், சில இடங்களில் திடீர் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.