தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வியாழக்கிழமை (மார்ச் 21) வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். மேலும், உள் தமிழகத்தின் சில பகுதிகளில் வியாழக்கிழமை வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர்பரமத்தி, சேலத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை தெற்கு, திருத்தணியில் தலா 99 டிகிரியும், மதுரை விமானநிலையம், பாளையங்கோட்டை, திருச்சியில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.