திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
மத்திய அரசின் திட்டமான, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வழங்கினார். அவரிடம் இருந்து தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாடினார்.
முன்னதாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் 18 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில், தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.