சென்னை: குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் நாளை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் மகேஷ்குமார், தினகரன் மற்றும் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரை முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை பிடித்து விசாரித்து அதுபற்றிய தகவலை உடனே தலைமையிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வேறு பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்து வருவதை உளவுப் பிரிவினர் கண்டறிந்து 12 பேரை கைது செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *