தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்துவிட்டது.
இருப்பினும், உரிய நேரத்தில் தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உரிய நேரம் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையமோ, உச்சநீதிமன்றமோ தெளிவுப்படுத்தவில்லை. இதனால், இந்த 3 தொகுதிகளுக்கும் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லையெனத் தெளிவாகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டது. அதில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.யு. சிங், பி. வில்சன் ஆகியோர்ஆஜராகி, தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தேதி முடிவடைவதையொட்டி, ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கடந்த திங்கள்கிழமை (மார்ச் 25) முறையிட்டனர். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மார்ச் 28-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
இதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமித் சர்மா, தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவோம் என்றார். அப்போது நீதிபதிகள், இதைப் பதிவு செய்து கொள்ளலாமா என்று கேட்டனர். பதிவு செய்து கொள்ளுங்கள் என்று வழக்குரைஞர் அமித் சர்மா கூறினார்.
இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதிகள், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து நாங்கள் தெரிவிக்க மாட்டோம் என ஏற்கெனவே கூறிவிட்டோம். உங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிச்சயம் பரிசீலிக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும். இது தொடர்புடைய மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.