பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு ஏப். 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள்களை மண்டலங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொழிப் பாடம், ஆங்கிலம் பாடத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு பொதுத் தேர்வில் கணிதப் பாடத்துக்கானத் தேர்வு இதுவரை இல்லாத அளவுக்கு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோன்று, நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட இதில் சராசரி மதிப்பெண் பெறுவது சிரமம்.

மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற அறிவியல் பாட வினாத்தாளும் கடினமாக இருந்ததால் மாணவ, மாணவியர் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக 5 மற்றும் 2 மதிப்பெண் பகுதிகளில் பெரும்பாலான கேள்விகள் மறைமுகமாகக் கேட்கப்பட்டிருந்ததால் பதிலளிக்க மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில், இறுதித் தேர்வாக சமூகவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 2-ஆவது வாரம் தொடங்கும். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29 -ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *