மின்னல் நொடிக்கு 50 முதல் 100 முறை பூமியை தாக்குகிறது. அப்போது 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்படுகிறது. உயிரினங்கள், தொலைத்தொடர்பு, மின்னனு சாதனங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்துகிறது.
மின்னல் ஆபத்து இடங்கள்:
* களத்து மேடு, உயர்ந்த இடங்கள், குடிசை.
* பாதுகாப்பற்ற மின்சார கம்பி வடங்கள், உலோக கட்டமைப்புகள்.
* கோல்ப் மைதானம், பரந்த நிலப்பரப்பு.
* மலை முகடுகள்
* விமானங்கள்.
மின்னலின் போது செய்யக்கூடாதவை:
* மின்சாரத்தால் இயங்கும் ரேசர், ஹேர் டிரையர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* அலைபேசி, தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது.
* உலோகப் பொருட்களை வெட்ட வெளியில் பயன்படுத்த வேண்டாம்.
* இரும்பு கம்பியுடன் கூடிய குடையை தவிர்க்க வேண்டும்.
மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள:
* மக்கள் வெளிப்பகுதிகளில் இருக்கும் போது கட்டிடங்கள், குகை அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும். உயர்ந்த மரங்களை மின்னல் எளிதாக தாக்கும் என்பதால் அருகே செல்லக் கூடாது.
* வெட்டவெளியில் தனித்த மரங்கள் மட்டும் உள்ள பகுதி எனில், கைகளால் கால்களை இறுக அணைத்து கால்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் குனிந்த நிலையில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குதி கால்களை உயர்த்தி முன்னங்கால்கள் குறைவான இடத்தில் படும் படி அமர வேண்டும்.
* நம் கைகளால் காதுகளை மூடிக் கொள்வதால், மின்னலால் ஏற்படும் அதீத சப்தத்தில் விடுபடலாம்.
* மின்சாரம் கடத்தும் பொருட்கள், நெருப்பு உள்ள இடங்களில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
* இரு சக்கர வாகனங்களில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். இரும்பு கைப்பிடி சுவர்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
* பாலங்களுக்கு கீழ் தஞ்சம் அடையலாம்.
* உயர் அழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தது 50 அடி துாரத்தில் இருப்பது நல்லது.
* தாழ்வான பகுதிகளில் அடர்த்தியாக வளர்ந்துள்ள குட்டை மரங்களுக்கு கீழ் தஞ்சம் அடையலாம்.