வடகிழக்கு பருவமழை அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை கூறியது: தென் தமிழகப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 8-ஆம் தேதி வரை பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் இரண்டு நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் வலுப் பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், மீனவர்கள் குமரிக்கடல், லட்சத்தீவுகள், தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்குப் பருவமழை: தென் மேற்குப் பருவ மழை வட இந்தியப் பகுதிகளில் இருந்து அடுத்து வரும் 3 நாள்களில் படிப்படியாக விலகிவிடும். இதைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை தமிழகம், கேரளம், தெற்கு ஆந்திரம், தெற்கு கர்நாடகம் பகுதிகளில் அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமாக சூழல் நிலவுகிறது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

சென்னையில் மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழை பெய்யும்.

ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, தமிழக பகுதி வழியாக ஈரப்பதமிக்க காற்று வீசும். அப்போது, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

ரெட் அலர்ட் குறித்து தமிழக மக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், ராமநாதபுரத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள் செல்ல அக்.6 முதல் அக்.9 வரை 3 நாட்களுக்கு காவல்துறையினர் தடை விதித்தனர். அதுபோன்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. தேனியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் விடுமுறை அறிவித்தார்.

காரைக்கால் மாவட்டத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்தார்.

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு முதல்வர் நாராயணசாமி விடுமுறை அறிவித்தார். சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக அக்.6 அதிகாலை முதல் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.26 அடியாக உள்ளது. அணையில் நீர்இருப்பு 29.7 டிஎம்சி ஆகும். நீர்வரத்து 6,462 கனஅடியாகவும், வெளியேற்றம் – 4,200 கனஅடியாகவும் உள்ளது. அதுபோன்று அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானி ஆற்றில் 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு சென்ற 215 படகுகள் கரை திரும்பியுள்ளதாகவும், 176 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் விரைவில் கரை திரும்புவார்கள் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மழையால் முக்கொம்பு தடுப்பணைக்கு பாதிப்பு இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்தார். கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் அறிவித்துள்ளார். மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *