திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் பிப்ரவரி மாதத்துக்கான தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், இன்று (14.02.2023) வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதம் தோறும் இணையதளம் வாயிலாக அனைத்து தரிசன டிக்கெட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி 22 ம் தேதி முதல் பிப்ரவரி 28 ம் தேதி வரை திருமலை திருப்பதியில் தரிசனம் செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளி பக்தர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் இன்று காலை 09:00 மணிக்கு https://online.tirupatibalaji.ap.gov.in என்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி மற்றும் பகல் 3 மணி என இருமுறை தரிசனம் செய்ய நேரம் ஒதுக்கப்படும். வெள்ளிக்கிழமைகளில் பகல் 3 மணி தரிசனம் மட்டும் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனம் செய்ய வரும் மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும். பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.