மருத்துவ படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பொது நுழைவு தேர்வு கட்டாயம் என்றும் நுழைவுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த தீர்ப்பு தமிழகம் உள்பட பல மாநில மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தை போலவே இன்னும் ஒருசில மாநிலங்களும் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016-2017 கல்வியாண்டில் மருத்துவ நுழைவு தேர்வு முதல் கட்டமாக மே 1ஆம் தேதியும் 2வது கட்டமாக ஜூலை 24ஆம் தேதியும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடத்த போதுமான கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டே நுழைவுத்தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வினை நடத்துவதற்கான உத்தேச தேதியை சமர்பிக்குமாறு நேற்று காலை உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தேச தேதியினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் வரும் மே 1ம் தேதி முதல் கட்டமாகவும், ஜூலை 24 ஆம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்வுகள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்த முடிவால் மாணவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
English Summary : Tamil Nadu government re-appeal for Medical entrance exam.