திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து இந்த அறக்கட்டளையில் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: திருப்பதி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகளை சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கருட சேவையை முன்னிட்டு சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
அதன்படி செப்டம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை பாரிமுனை பூக்கடை காவல் நிலையம் அருகே தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்குகிறது.
இந்த ஊர்வலம் என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா திரையரங்கம்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடைகிறது.
அதையடுத்து நாளை செப்டம்பர் 15ஆம் தேதி ஐ.சி.எஃப்., ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கும், புதன்கிழமை (செப்.16) பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், திருமுல்லைவாயில் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆவடியில் தங்குகிறது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதி வியாழக்கிழமை திருநின்றவூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கும், செப்டம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருப்பாச்சூர் வழியாக திருச்சானூருக்கும் திருக்குடை ஊர்வலம் செல்லவுள்ளது. மறுநாள் செப்டம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை திருமலைக்குச் சென்று மாடவீதி வலம் வந்து வஸ்திரம், மங்கலப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படும் என அதில் கூறியுள்ளார்.
English Summary:Today is the beginning of the procession in Chennai Tirupati tirukkutai.