பொதுமக்கள் மிக எளிதாக பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்து மிக விரைவாக பாஸ்போர்ட் பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் படித்த மற்றும் கணிணி வசதியுள்ளவர்கள் மிக எளிதாக ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் கிராமப்புறங்களில் கல்வியறிவு இல்லாதவர்கள் பாஸ்போர்ட்டிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியவில்லை. கிராமப் புறங்களில் கம்ப்யூட்டர் வசதி இல்லாததால் இவர்களுக்கு பெரும் சிரமமும், கஷ்டமும் இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி ஒருசில தரகர்கள் பாஸ்போர்ட் எடுக்க ரூ.5000 முதல் ரூ.8000 வரை கிராம மக்களிடம் வசூல் செய்து வருவதாக மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குனர் குமரகுருபரனுடன் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட் சேவையை கிராமப்புற மக்களுக்கு சென்றடையும் வகையில் விரிவுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 264 தாலுகா அலுவலகங்ளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் ஆன்–லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்டிற்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்குகிறது.
இதுதவிர தலைமை செயலகம், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டல அலுவலகங்கள், ரிப்பன் மாளிகை மற்றும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்கள் என மொத்தம் 285 இடங்களில் ஆன்லைன் சேவை தொடங்குகிறது.
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கட்டணமாக மொத்தம் ரூ.1655 ரொக்கமாக வசூலிக்கப்படும். இதில் ரூ.1500 பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் ரூ.100 அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கும் ரூ.55 ஸ்டேட் பாங்கிற்கும் கமிஷனாக பெறப்படுகிறது. இந்த இசேவை மையங்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நிறுவகித்து வருகிறது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலகுரு கூறியதாவது:
கிராமப்புற மக்களுக்காக பாஸ்போர்ட் இசேவை மையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன. அங்கு சரியான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் சென்றால் அதனை சரி பார்த்து ஆன்லைன் மூலம் பதிவு செய்வார். பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயம் செய்து விண்ணப்பத்தினை முறையாக நிரப்பி கொடுப்பார். இதற்கான கட்டணம் ரூ.1655 மட்டுமே. இதுபோக எவ்வித செலவும் இல்லை. புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களும், புதுப்பிக்க தவறியவர்களும், குறிப்பிட்ட காலம் முடிந்து மீண்டும் பாஸ்போர்ட் பெற விரும்புவர்களும் அங்கு விண்ணப்பிக்கலாம்.
பணம் செலுத்தியதற்கான ரசீது வழங்கப்படும். கிராமப்புற மக்கள் எவ்வித சிரமமின்றி பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க அரசு இசேவை மையங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இடைத்தரகர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை. விண்ணப்பதாரர்களே நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
English Summary:Today is the Beginning to take a Passport in Taluk Office.