kamalhassanகோலிவுட், பாலிவுட் நடிகர் நடிகைகளும், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும், தங்கள் தொழிலில் சம்பாதிப்பதைவிட மிக அதிகமாக விளம்பர படத்தில் நடித்து சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் உலகமே புகழும் ஒரு நடிகராக இருந்தும், பல விளம்பர பட வாய்ப்புகள் தேடி வந்தும், இதுவரை விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். அவர் நடித்த ஓரிரு விளம்பர படங்களும் எய்ட்ஸ், போலியோ போன்ற நோய்களுக்கான விழிப்புணர்வு விளம்பர படங்களே ஆகும்.

இந்நிலையில் முதல்முறையாக சென்னை, மதுரை, நெல்லை ஆகிய நகரங்களில் பிரபலமாக உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான ‘போத்தீஸ்’ நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விளம்பரப் படம்தான் கமல்ஹாசன் நடிக்கும் முதல் வர்த்தக விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த விளம்பர படத்தில் கிடைக்கும் சம்பளப் பணம் முழுவதையும் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளின் சிகிச்சைக்காக கமல் நன்கொடை அளிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசன் தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரவுபகலாய் நடந்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்த படத்திற்கு கமல் விரைவில் தயாராகவுள்ளார். மெளலி திரைக்கதையில், லிங்குசாமி தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் இயக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

English Summary:The first trade ad film starring Kamal for AIDS patients.