சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணப் பெட்டி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு சந்நிதானம் வந்தடையும். ஐயப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
மகர ஜோதியைக் காண்பதற்காக வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதிகம்.
மகர ஜோதியைத் தரிசிக்க பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் ஆண்டுதோறும் சபரிமலைக்கு வருவார்கள். கேரள உயர்நீதிமன்றம் அமைத்த 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு, நிலக்கல், பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்தனர். சபரிமலையில் போலீஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.