psychological7116

ஒவ்வொரு ஆண்டும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த உளவியல் ஆலோசனைகள் தேர்வுத்துறையினர் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டும்  10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 104 தொலைபேசி சேவை மூலம் இன்று முதல் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும் தேர்வுக்கு முன்பு தேவைப்படும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், உணவு முறைகள் ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு சமயத்தின்போது ஏற்படும் மனஅழுத்தம், தோல்வி குறித்த பயம் உள்ளிட்டவற்றுக்கு ஆலோசனைகளைப் பெறலாம்.

தேர்வு முடிவு வெளிவரும்போது, அதை எதிர்கொள்வது, தோல்விகளைக் கையாள்வது, விரக்தி நிலையில் இருந்து மீட்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமன்றி, தேர்வு சமயத்தை கையாள்வது குறித்து மாணவர்களின் பெற்றோர்களும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், தேர்வு குறித்த குழப்பங்கள், மனஅழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆலோசனைகள் மிகுந்த பயன்களை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேவைகளுக்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட சிறப்புக் குழு 24 மணி நேரமும் செயல்படும். தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து இந்தச் சேவையை மாணவர்கள், பெற்றோர்கள் பெற முடியும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English Summary: Today Onwards 10th and 12th Students Psychological Counselling.