உலகம் முழுவதும் நாளை (08.11.2022) முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.
சூரியன், நிலவு மற்றும் பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை முழுமையாக பூமி மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 16-ம் தேதி தென்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது சந்திர கிரகணம் நாளை (08.11.2022) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி, மதியம் 2.39 முதல் மாலை 6.19 மணி வரை கிரகணம் நிகழும். இதில் முழு சந்திர கிரகணம் 3.46 முதல் 5.11 மணி வரை தென்படும். அப்போது நிலவு சிவப்பு நிறத்தில் (Reddish color) காணப்படும்.. இது ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும். கொல்கத்தா, சென்னை உட்பட கிழக்கு பகுதிகளில் மட்டும் சந்திரன் உதயத்தின்போது கிழக்கு தொடுவானில் கிரகணத்தின் இறுதி நிலைகளை காணலாம். சந்திர கிரகணத்தை வெறும் கண்களால்கூட பார்க்கலாம்.