சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பெண்களுக்கு என தனி கவுண்டர்கள் இல்லை. பெண்களுக்கு தனி கவுண்டர்கள் தேவை என பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்கள் மட்டும் 120 பேர் டிக்கெட் முன்பதிவு செய்ய வருவார்களேயானால் அந்த மையங்களில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்களை அமைக்க வேண்டுமென ரயில்வே மண்டலங்களுக்கு ரயில் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பெண்கள் கைக்குழந்தைகளுடன் நீண்ட நேரம் நின்று டிக்கெட் முன்பதிவு செய்ய அவதிப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து பெண் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தனி கவுன்ட்டர்கள் அமைக்க வேண்டுமென கடந்த 2001-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை முழுமையாக ரயில்வே மண்டலங்கள் அமல்படுத்துவதில்லை என புகார் எழுந்தது. இது குறித்து ரயில்வே வாரியத்துக்கு பெண்களுக்கான அதிகார கமிட்டி கோரிக்கை அளித்துள்ளது. இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு மையங்களில் பெண்களுக்கு என தனி கவுன்ட்டர் திறக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கு நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: “ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் ஒரு ஷிப்ட்டில் பெண்கள் 120 பேர் டிக்கெட் முன்பதிவு செய்யும் அளவுக்கு தேவையிருந்தால், அந்த மையங்களில் பெண்களுக்கென தனி கவுன்ட்டர்களை அமைக்க வேண்டும். மேலும், ஒரு ஷிப்ட்டில் பெண்கள் 120க்கும் குறைவானோர் மட்டுமே முன்பதிவு செய்தால், அவர்களை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கலாம். பெண்களுக்கான தனி கவுன்ட்டர்கள் காலை 11.30 மணிக்கு பிறகே செயல்படும். பெண்களுக்கான ஒதுக்கப்படும் தனி கவுன்ட்டர்களில் பெண்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
English Summary:Train ticket booking centers for women in order to set up separate counters