பேருந்துகளில் பயணம் செய்வதைவிட ரெயில்களில் பயணம் செய்வதால் செளகரியாமான பயணத்தோடு பாதுகாப்பான பயணமாக இருப்பதால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விசேஷ நாட்களில் மட்டுமின்றி வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை பயணிகளின் கூட்டம் பலமடங்கு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில் மற்றும் சுவிதா சிறப்பு ரெயில் போன்றவைகளை தெற்கு ரயில்வே தற்போது இயக்கி வருகின்றது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருப்பது இல்லை. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாகும். அதேபோல் சுவிதா சிறப்பு ரெயில்களில் காலி இடங்களுக்கு ஏற்ப கட்டணம் பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்லும். காலி இடங்கள் குறைந்து கொண்டே செல்லும்போது கட்டணம் உயர்ந்து கொண்டே செல்லும். இத்தகைய சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுவது இல்லை.
முன்பதிவு இல்லாத பெட்டிகள் இல்லாததால் கடைசி நேரத்தில் பயணத்தை முடிவு செய்பவர்களும், அடித்தள மற்றும் நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வருவாய் நோக்கத்தோடு ரெயில்வே துறை இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்ததற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதோடு, இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தற்போது சிறப்பு ரெயில்கள் மற்றும் சுவிதா சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் சிறப்பு மற்றும் சுவிதா ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கும் வசதி நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary: Unreserved Coaches Joined With Suvitha train March 1st onwards.