voters listதமிழகசட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக தேர்தல் ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்ய இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று சென்னை வந்தார். தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகளான தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பா.ஜ.க., ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்களை நீக்கி புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்க மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி அறிவித்தார். அதன்படி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை நீக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருத்தல், முகவரி மாறி சென்றவர்களின் விவரங்களை கண்டறிந்து அந்த பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3,699 வாக்குச் சாவடிகளிலும் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. வாக்குச்சாவடி மைய அதிகாரி தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பிரச்சினைக்குரிய வாக்காளர்கள் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட எம்.எம்.டி.ஏ. காலனியில் பழைய நடராஜபுரம் பகுதியில் ஆய்வு செய்த போது சரஸ்வதி என்ற பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் 12 இடத்தில் இடம் பெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்தல் அதிகாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வெவ்வேறு முகவரியில் இருந்த அந்த பெயர்களை வாக்குச்சாவடி அதிகாரி நீக்கம் செய்ய பரிந்துரைத்தார்.

தற்போது குடியிருந்து வரும் முகவரியில் மட்டும் வாக்காளர் பெயர் இடம் பெறவும் மற்ற இடங்களில் இருந்த பெயரை நீக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார். இது போல பலருக்கு 2 இடங்களில் பட்டியலில் பெயர் இருந்தது கண்டுபிடித்து அதிகாரி நீக்கினார். சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. குளறுபடிகளை சரி செய்வதன் மூலம் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English Summary: Fake Voters Name Removal from the voterlist.