கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோரின் நடிப்பில் “ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்’, “திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் படம் “உத்தம வில்லன்.’ ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரியை வெளியிட கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையிலிருந்து அந்த முகவரியை பதிவிறக்கம் செய்து கொண்டார்.
பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசியது: இந்த நிகழ்ச்சி தயாராவதற்கு முன்பு பல முறை ஒத்திகை பார்த்து வந்தேன். ஆனால் இப்போது, பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டது. அதனால் என்னால் பேசக் கூட முடியவில்லை. எனக்கும் அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு.
இது அவரைப் பற்றிய தாமதமான நினைவு கூரல் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு பல மேடைகளில் இதைப் பேசியிருக்கிறேன். இயக்குநர் பாலசந்தரால் என்னைப் போல் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவர் குருவாக இல்லாமல், மகா குருவாக இருந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நீங்கள் நடியுங்கள் என அழைத்த போது மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர் நடிக்க வந்தது பெருமையான விஷயம். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால் பல தகவல்களை நான் சேகரிக்காமல் விட்டு விட்டேன்.
இங்கே பேசிய பார்த்திபன், கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். கர்வமாக இல்லாமல் உரிமையாக, கடமையாக ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடருவேன்,” என்றார் கமல்ஹாசன்.