Vandalur Zoo

சென்னை அருகேயுள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சமீபத்தில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள் பிறந்த செய்தி அனைவரும் அறிந்ததே. இந்த புலிக்குட்டிகளை இதுவரை பார்வையாளர்கள் பார்க்க முடியாத சூழல் இருந்த நிலையில் இனி பார்வையாளர்கள் நேரடியாக கண்டுகளிக்கலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் நம்ருதா பெண் வெள்ளைப் புலி (6 வயது), விஐய் (12 வயது) என்ற ஆரஞ்சு நிற ஆண் புலியுடன் இணை சேர்ந்து ஆரஞ்சு நிறத்தில் இரண்டு ஆண் குட்டிகளையும் இரண்டு பெண் குட்டிகளையும் கடந்த அக்டோபர் மாதம் ஈன்றது. இந்தப் புலிக் குட்டிகளுக்கு தேவா, நகுலா, கலா, மாலா என தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இந்தப் புலிக்குட்டிகளை பார்வையாளர்கள் நேரடியாகக் காணமுடியாத சூழல் இருந்ததால் புலியின் பிரசவ அறையில் கேமராகள் பொருத்தப்பட்டு கணினித் திரை மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் புலிக்குட்டிகளை நேரடியாகக் காண்பதற்கு உரிய ஏற்பாட்டை செய்யுமாறு பார்வையாளர்களிடமிருந்து, குறிப்பாக மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

இப்போது புலிக்குட்டிகள் தாய்ப் புலியை அடையாளம் காணவும், நன்கு வளர்ந்து நடக்கவும் ஓடவும் பழகிவிட்டபடியால் பார்வையாளர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக இனப்பெருக்க மையத்தில் உள்ள திறந்தவெளி அடைப்பிடம் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் குடிநீர் தொட்டி உரிய பராமரிப்புப் பணி செய்து புலிக்குட்டிகள் நீந்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது.
ஈ, பேன், உண்ணி, சிற்றுண்ணி போன்ற பூச்சிகள் புலிக்குட்டிகளைத் தாக்காமல் இருக்கும் பொருட்டு திறந்தவெளி அடைப்பிடங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு உரிய நோய்த் தடுப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்பு ஜனவரி 11 ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில் புலிக்குட்டிகளைப் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காகத் திறந்தவெளி அடைப்பிடத்தில் விடப்பட்டன. பிறந்து மூன்று மாதங்களேயான புலிக்குட்டிகளைக் காண்பது பூங்காவிற்கு வந்த பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்துள்ளது.
திறந்தவெளி அடைப்பிடத்தில் புலிக்குட்டிகள் தாயுடன் இருப்பதை நேரடியாகக் காண்பதுடன், பார்வையாளர்கள் தொடர்ந்து கணினித் திரை மூலமும் கண்டுகளிப்பதற்கான வசதியும் தொடரும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary: Vandalur orange tiger cubs on open space in the park. Visitors delight.