பி.எல்.ஐ. எனப்படும் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவற்றின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையத்தில் கணினிமயமாக்கப்பட்ட அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் செயல்பாடுகளை மெர்வின் அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தார். இந்த தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:

1884-ஆம் ஆண்டு முதல் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளது. பின்னர் கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. இரு காப்பீட்டுதாரர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்திலும், கர்நாடகம் 2-ஆவது இடத்திலும் உள்ளன. இருப்பினும், காப்பீடுதாரர்கள் குறைவாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து அஞ்சலகங்களும் வெளிநாட்டு மென்பொருள் உதவியுடன் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எங்கேயும் தொகையை செலுத்த முடியும். இணைய வங்கிச் சேவையிலும் செலுத்தலாம்.

பிரீமியம் செலுத்துவதில் தாமதம், முதிர்வு பணம் பெறுவதில் இடர்பாடுகள் ஆகியன முற்றிலும் களையப்படும். 36 லட்சம் பேர்: தமிழகத்தில் தற்போது 5 லட்சத்து 37 ஆயிரத்து 152 அஞ்சலக ஆயுள் காப்பீட்டுதாரர்களும், 36 லட்சத்து 59,200 கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்தாரர்களும் உள்ளனர். இதேபோல் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில், தற்போது 3 லட்சத்து 49, 618 அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்தாரர்களும், 6 லட்சத்து 67,506 கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்தாரர்களும் உள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு முறையே ரூ.5,144, ரூ.2,793 கோடியாகும்.

விரைவில் 3 புதிய ஏ.டிஎம்.: ஆரணி, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய 3 இடங்களில், புதிதாக ஏ.டி.எம். திறக்கப்படவுள்ளது. ஏற்கெனவே, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 8 ஏ.டி.எம். உள்ளது

இவ்வாறு மெர்வின் அலெக்ஸாண்டர் பேசினார்.

English Summary: Life Insurance to be Computerized 100% in Post Office, says Chennai Postal Regional Office.