தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து கொண்டே இருப்பதால் சென்னையில் இட நெருக்கடி நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. குறிப்பாக டூவிலர் பார்க்கிங் மற்றும் கார் பார்க்கிங் என்பது சென்னையில் மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க சென்னை மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஒன்றை கட்டி வருகிறது. விரைவில் தொடங்கப்படவுள்ள இந்த அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் சோதனை முறையில் தற்போது கார்கள் நிறுத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அந்த வாகன நிறுத்தம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதான் சென்னையின் பொதுமக்களுக்கான முதல் அடுக்குமாடி வாகன நிறுத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரீம்ஸ் சாலையை ஒட்டிய வாலஸ் தோட்டம் சாலையில், அப்போலோ மருத்துவமனைக்கு எதிரில் ஏழு அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கடந்த மூன்று வருடங்களாக கட்டப்பட்டு வருவது சென்னை மக்கள் பெரும்பாலானோர் அறிந்ததே. இதில் 330 கார்களையும், 220 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் வாகனங்களுக்கு டோக்கன் அளித்து கார்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு சுமார் ரூ.30, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 என வசூல் செய்யப்படும். சுமார் 10 கிரவுண்ட் இடத்தில் இந்த வாகன நிறுத்துமிடத்தை அப்போலோ மருத்துவமனை மற்றும் மார்க் ஆக்சிஸ் நிறுவனம் இணைந்து கட்டி வருகின்றன. கட்டி முடித்த பிறகு இதிலிருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சென்னை மாநகராட்சிக்கு இவர்கள் அளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான சோதனை ஓட்டம் முடிந்து விட்டது. தற்போது கார்களை நிறுத்து வதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த வாகன நிறுத்துமிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும்” என்று கூறினார்.

இதேபோன்று நுங்கம்பாக்கம் வாகன நிறுத்துமிடத்துக்கான ஆய்வறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் சங்கீதா உணவகத்துக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்போது லாரி பணிமனை உள்ளது. அங்கு சுழற்சி முறையில் (ராட்டினம் இயங்குவது போல) வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் அருகிலும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இடத்தில் ஆகாய நடைபாதை அமையவிருப்பதால், அதனுடன் ஒருங்கிணைந்து வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

English Summary: Seven Storey’s Building is going to open soon for Vehicles parking in Chennai.