சமீபத்தில் ‘ஐ’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த நடிகர் விக்ரம் இன்று தனது 49வது பிறந்த நாளை நார்வே நாட்டில் தனது குடும்பத்தினர்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார். கடந்த வாரம் நேபாளத்தில் நடந்த ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்த விக்ரம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோடை விடுமுறைக்காக தனது குடும்பத்தினர்களுடன் நார்வே நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுமார் ஒருமாத காலம் தங்கியிருக்கும் அவர் மே இறுதியில் திரும்பி வருவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டில் பிறந்த நாளை கொண்டாடும் விக்ரம், தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக ’10 எண்றதுக்குள்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று அதிகாலை மிகச்சரியாக 12மணிக்கு வெளியிட்டுள்ளார்.

சாலை ஆக்சன் படமாக உருவாகி வரும் ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடித்திருக்கின்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா இருவேடங்களில் நடித்து வருகின்றார். மேலும் இந்த படத்தில் பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா ஆகியோர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை சார்மி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் வசனக்காட்சிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டிய நிலையில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary : Vikram ‘s birthday party for fans