விஷால் நடித்த ‘பாயும் புலி’ உள்பட ஒருசில படங்கள் நாளை அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டு, அந்த படங்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 4 முதல் எந்த தமிழ்ப்படங்களையும் ரிலீஸ் செய்யபோவதில்லை என திடீரென தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
விஷால் நடித்த பாயும் புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு பல்வேறு வகையான மிரட்டல்கள் வந்ததை அடுத்து இதற்கு முடிவு கட்டும் விதமாக நேற்று சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அவசர கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு:
செங்கல்பட்டு மாவட்டத்தை சேந்ர்த கோயம்பேடு ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக் கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் தீய சக்தியாக வேலை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். தங்களுகு ஒரு பெருந்தொகை தரவேண்டும் என்றும், அந்த தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் புதிய நேரடித் தமிழ் படங்கள் மற்றும் மாற்றுமொழிப் படங்களும் வெளியிடுவதில்லை என்றும் மேலும் 11.09.2015 முதல் அனைத்து திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி முடிவு கோலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
English Summary:Vishal’s paayum puli sudden cancellation of release. Kollywood sensation.