தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல் போன்ற பணிகளை சிறப்பு முகாம்கள் மூலம் முடித்த தேர்தல் ஆணையம் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 81 லட்சத்து 49 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரத்து 472 பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் திருத்தம், பெயர் சேர்த்தல் தொடர்பான விண்ணப்பங்கள் அக்டோபர் 24-ம் தேதி வரை பெறப்பட்டன.
வரைவு வாக்காளர் பட்டியல் படி, தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 கோடியே 81 லட்சத்து 49 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்கள். 2 கோடியே 84 லட்சத்து 28 ஆயிரத்து 472 பேர் பெண் வாக்காளர்கள், இதர பாலினத்தினர் 3 ஆயிரத்து 719 பேரும் அடங்குவர்.
செப்டம்பர் 15-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 20, அக்டோபர் 4 மற்றும் 11 தேதிகளில் மூன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முகாம்களில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
சிறப்பு சுருக்க முறை திருத்த காலத்தில், 22 லட்சத்து 81 ஆயிரத்து 392 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில், பெயர் சேர்க்கவும், முகவரி மாற்றம் தொடர்பாகவும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 98 மனுக்கள் பெறப்பட்டன. நீக்கம் செய்வது தொடர்பாக ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 920 மனுக்களும், திருத்தம் தொடர்பாக 2 லட்சத்து 69 ஆயிரத்து 227 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 136 மனுக்கள் இடமாற்றம் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகவல் பதிவேற்றம், மனு மற்றும் ஆவணங்களை பதிவு (ஸ்கேன்) செய்தல், தகவல்களை கள ஆய்வில் சரிபார்த்தல், வாக்குச்சாவடி அலுவலர் அறிக்கை, வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலரின் ஒப்புதல், வாக்காளர் அட்டை தயாரிப்பு என ஆறு நிலைகளுக்கு அனுப்பப்படுகிறது.
மனுவின் நிலை குறித்த தகவல் மனுதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
வாக்குச்சாவடி அலுவலர், வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர் பணிகள் அதற்கொன உருவாக்கப்பட்ட செயலிகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்கள் மனுவின் நிலை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் அறியலாம். கைபேசி எண் அளித்திருந்தால் அதிலும் அவ்வப்போது தகவல் அனுப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary-voter list released for upcoming election