aadhar-students-30102015
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மாணவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தி உடனடியாக ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு மாணவர்களுக்கு ஆதார் எண் எடுக்க முகாம் நடத்துங்கள் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* ஒரு பள்ளியில் ஆதார் எண் பெறுவதற்கு பதிவு செய்யாத மாணவர்கள் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் அப்பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

* பள்ளி வேலைநாட்களில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் நேரம் முதல் மாலை 5.30 மணி வரையிலும் இம்முகாம் நடத்தப்படவேண்டும்.

* திங்கள் முதல் ஞாயிறு முடிய விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் ஆதார் எண் பதிவு செய்யும் முகாம் நடத்தப்பட வேண்டும். பள்ளி வேலைநாட்களில் பள்ளி வேளை நேரம் முடிந்த பின்பும் மற்றும் அனைத்து விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

* ஒரு பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்யப்படவேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கின்ற பள்ளிகளை கண்டறிந்து அப்பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் முகாமை தொடர்பு மையமாக அமைத்து 100-க்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் மாணவர்களை அம்மையத்திற்கு அழைத்துச் சென்று ஆதார் பதிவுகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை முகாம் நடைபெறும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்ளவேண்டும்.

* மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, நிதிநாடும் மற்றும் தனியார் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 100-க்கும் குறைவாக மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை கண்டறிந்து அவர்களது பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் எண் பதிவு செய்யும் மையத்திற்கு எந்தெந்த பள்ளிகள் எந்தெந்த நாட்களில் முகாமிற்கு செல்ல வேண்டும் என்ற கால அட்டவணையினை சரகம் வாரியாக தயார் செய்ய வேண்டிய பணியினை மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். இக்கால அட்டவணையினை முகாம் நடைபெறும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முன்னதாகவே அளித்து விட வேண்டும்.

இப்பணி மிக முக்கியமானதால் இதில் தனி கவனம் செலுத்தி தங்கள் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றுள்ளார்களா? என்பதை உறுதி செய்திடவும் 100 சதவீத இலக்கை அடைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English summary-Aadhaar enrolment camp for school students