உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த குடிநீர் லாரிகள் மற்றும் கேன் உற்பத்தியாளர்கள் பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டு ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரைமுறையின்றி நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தடுக்கும் முக்கியமானத் தீர்ப்பை அறிவித்தது. அதில் ‘சட்டவிரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு தடை விதித்தும் வணிக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும்’ என்றும் கூறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லாரி உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று முன் தினம் மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், , மருத்துவமனைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகம் தண்ணீர் தட்டுப்பாட்டால் நேற்று இழுத்து மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.. இதனால் சென்னை முழுவதும் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அரசு லாரி உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டு குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டனர். ஆனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நேற்றிரவு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் நீதிமன்றத் தீர்ர்புக்கு உடபட்டு செய்ய்க்கூடிய சலுகைகளை செய்து தருவதாக ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *