12ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும் 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி 74 மையங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியில் தற்போது தமிழ், ஆங்கிலம் விடைதாள் திருத்தும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளன. மற்ற பாடங்களுக்கான விடைத்தாள்களும் தற்போது திருத்தப்பட்டு வருகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு செல்லக் கூடிய இந்த விடைத்தாள்கள் இனிமேல்தான் திருத்தப்படுகிறது. வருகிற 20ஆம் தேதிக்குள் திருத்தும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டசபை தேர்தலும் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அனேகமாக மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கும், 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கும் தேர்தல் முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. எப்போதும் போல விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை தமிழ் ஆசிரியர்களும், ஆங்கில வழியில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை ஆங்கில ஆசிரியர்களும் திருத்துகிறார்கள். இதனால் விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தேர்வு முடிவுக்கு பிறகு மறுமதிப்பீடு செய்ய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காக ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் தமிழ் வழி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களையும் திருத்துகிறார்கள்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறித்து இதுவரை தேதி முடிவு செய்யப்படவில்லை. மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர் படிப்புகளை தொடர எவ்வித பாதிப்பு இல்லாமல் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று கூறினார். ஆனாலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 7 அல்லது 9ஆம் தேதி வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary: When did the +2 results be announced this year??