metro subwayகோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ சேவை கடந்த ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில் கோயம்பேடு- ஷெனாய் நகர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்க வழிப்பாதையில் செப்டம்பர் முதல் வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யவுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில், 24 கி.மீ. தொலைவுக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப் பாதையும், 21 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட ரயில் பாதையும் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து இயக்கப்படவுள்ளன.

2-ஆவது வழித்தடத்தில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேட்டுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்போது சின்னமலை விமான நிலையம்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இது பயன்பாட்டுக்கு இந்த மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கோயம்பேடு முதல் எழும்பூர் வரையில் மொத்தம் 8 கி.மீ. தொலைவுக்கு 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டன.

இதில், கோயம்பேட்டில் இருந்து ஷெனாய் நகர் வரையில் 5 கி.மீ. தொலைவு வழித் தடத்தில், ஒட்டுமொத்தப் பணிகளும் முடிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரயில் என்ஜின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், ரயில் பாதையின் தன்மை குறித்து முழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜூலை 16-இல் தொடங்கியது. அப்போது, ரயில் பாதையின் தரம், ரயில் நிலையங்களில் ரயில் சரியான இடத்தில் நிற்கிறதா? பக்கவாட்டில் போதிய இடவசதி இருக்கிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடைபெற்றது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்திய பின்னரே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு எப்போது இயக்குவது என்பது குறித்து தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: When koyampedu-Shenoy Nagar Metro rail subway Test?