சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நெருக்கடிக்கு தீர்வு காண பல மேம்பாலங்கள் சென்னையில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருமங்கலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் இந்த மேம்பாலம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு, பாடி, அண்ணா நகர், கலெக்டர் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் சந்திக்கும் முக்கிய பகுதியாக திருமங்கலம் சிக்னல் உள்ளது. இதனால் இங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். குறிப்பாக பீக் ஹவர் என்று கூறப்படும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனையடுத்து இந்தப் பகுதியில் ரூ.60 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 4 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் வகையில், சுமார் 800 மீட்டர் நீளம் கொண்ட மேம்பாலம் அமைக்கும் பணியில், சுமார் 550 மீட்டர் நீளம் வரையிலான பணி கடந்த ஆண்டு முடிவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள சுமார் 250 மீட்டர் நீளத்துக்கான மேம்பாலப் பணி கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டு, தற்போது நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி நடைபெறும் பகுதிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்வதற்கான இரு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் மேம்பாலத்துக்கான தூண்கள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஐ.ஐ.டி. உதவியுடன் நவீன திட்டத்தின் மூலம் அந்தப் பகுதியில் சாம்பல் போன்ற துகள்களை கொட்டி மேம்பாலத்துக்கு தேவையான உயரம் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதால் உயர்த்தப்படும் பகுதியுடன், ஏற்கெனவே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மற்றொரு பகுதியை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் கட்டுமானப் பணி நிறைவுப் பகுதியை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, “95 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக் கட்டத்தில் இருப்பதால் எஞ்சிய பணிகளும் விரைவில் நிறைவடையும். முன்னர் பயன்பாட்டில் இருந்த அனைத்து வழித் தடங்களும், மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் மேம்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் முழுவதும் ரூ.60 லட்சத்தில் விளக்குகள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள உள்ளது என்று கூறினர்
English Summary:When the Open for Chennai Thirumangalam Flyover.