நாடு முழுவதிலும் உள்ள 375 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் உள்பட நாட்டின் பல சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோடிக்கணக்கான பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் வரும் லாரிகளின் இயக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

நாடு முழுவதும் லாரி வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தாலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் லாரிகள் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும், பிறபகுதிகளில் லாரிகள் இயக்கப்படாததால், கோயம்பேடு மார்க்கெட்டு 20 சதவீதம் லாரிகள் வரவில்லை என்றும், இதனால் சில குறிப்பிட்ட காய்கறிகள் விலை அதிகளவில் உயர்ந்து இருப்பதாகவும் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, மார்க்கெட்டுக்கு வரவேண்டிய லாரிகளில் 20 சதவீதம் லாரிகள் குறைந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் விலை மட்டும் சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக, தக்காளி, அவரைக்காய், முருங்கைக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வேலை நிறுத்தம் ஆரம்பித்து 2 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து கணிசமாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதே நிலை தொடருமானால், காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டாலும், நேற்று அரசு விடுமுறை என்பதால், காய்கறிகளை வாங்க வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Vegetable prices increases due to lorry strike