சென்னை மெரீனா கடற்கரையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் உள்ளூர் மக்களும், வெளியூர் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இவர்களில் சிலர் கடல் நீரை பார்த்ததும் ஆர்வக்கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி குளிப்பதால், அவ்வப்போது நீரில் மூழ்கி மரணம் அடையும் துயரச்சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் மெரீனாவில் கடலில் மூழ்கி தத்தளிப்போரை மீட்பதற்காக, தமிழக கடலோரப் பாதுகாப்புப் படை கமாண்டோ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சிறப்புப் பயிற்சி சமீபத்தில் நிறைவு பெற்றதையொட்டி, ஒத்திகை நிகழ்ச்சி மெரீனாவில் நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை கடலோரப் பாதுகாப்புப் படை குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஐ.ஜி. சொக்கலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். ஒத்திகைக்கு பின்னர் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடலில் சிக்கியோரை மீட்பதற்கு முதல் கட்டமாக சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள், மெரீனா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மெரீனாவை அடுத்து படிப்படியாக பிற கடற்கரைக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள், மெரீனா கடற்கரையில் விடுமுறை நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்’ என்று கூறினார்.

மெரீனாவில் கடலில் ஏராளமானோர் மூழ்கி இறப்பதைத் தடுக்கும் வகையில், தமிழக கடலோரப் பாதுகாப்புப் படை குழும கமாண்டோ வீரர்களுக்கு புணேயைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த 15 நாள்களாகப் பயிற்சி அளித்து வந்தது. கடலில் மூழ்குபவர்களை மீட்பது எப்படி, மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த பயிற்சியில் விரிவாக விளக்கப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் தங்கள் பணியை விரைவில் தொடங்கவுள்ளதால் இனி மெரீனாவில் ஏற்படும் மரணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Rescue training took place in Chennai at Marina beach.