சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் பொதுமக்களுக்கு கைகொடுத்தது இந்த மெட்ரோ ரயில்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையின் ஒருசில பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் தாமதமடைந்து கொண்டே செல்வதற்கு, நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மயே காரணம் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, “மார்ச் 2015-ம் தேதியன்று சென்னை மெட்ரோ ரயில் திட்ட வேலைகள் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால் ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்ததாரரின் செயலின்மை, இதனால் வெளியிட்ட மறு டெண்டர்கள் ஆகியவையே தாமதத்துக்குக் காரணங்கள் ஆகும்’ என்று கூறியுள்ளார்
ரஷ்ய நிறுவனம் மாஸ்மிட்ரோஸ்ட்ராய் மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து விலகியதை அடுத்து அதன் கூட்டாளி நிறுவனமான கேமன் இந்தியா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு மறு டெண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்றதால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தங்களை ரத்து செய்தது. அதன் பிறகு புதிதாக டெண்டர்கள் விடப்பட்டன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் உத்தேச செலவு ரூ.14,600 கோடியாகும். நகரத்தின் 45 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை போடப்பட்டு வருகிறது. இதில் 24 கிமீ ரயில் பாதை பூமிக்கு அடியில் அமைக்கப்படுகிறது.
இதுவரை இத்திட்டத்துக்காக ரூ.6,597 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான விரிவாக்க மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சமீபத்தில்தான் ஒப்புதல் கிடைத்தது. 9 கிமீ தொலைவு கொண்ட இதற்கு ரூ.3,700 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆலோசகர்களை இறுதி செய்யும் நடவடிக்கைகளில் இருந்து வருகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
English summary-Why CMRL work getting delayed-minister explains/em>