இந்தியாவில் இதுவரை ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட பைக்ரேஸ்கள் நடந்துள்ள நிலையில் தற்போது முதல்முறையாக பெண்களுக்கான பைக் ரேஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. சென்னை மற்றும் கோவையில் நடைபெற உள்ள இந்த போட்டிளை டிவிஎஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அலிஷா அப்துல்லா ரேஸிங் பயிற்சி பள்ளி நடத்துகிறது.
இதுகுறித்து அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமியின் நிறுவனர் அலிஷா அப்துல்லா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
‘சென்னையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமி, ரேஸிங் வீராங்கனைகளுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பயிற்சி பள்ளி. பைக் ரேஸில் ஆர்வமுள்ள பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் இந்த பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு டிவிஎஸ் ரேஸிங் அணி பைக்குகள், தொழில்நுட்ப உதவிகளை அளிக்க முன்வந்துள்ளது.
எங்கள் பயிற்சி பள்ளிக்கு தமிழகம், பெங்களூரு, கோவா, மும்பை, ஐதராபாத் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 இளம் பெண்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கலந்து கொள்ளும் தேசிய அளவிலான போட்டி சென்னை மற்றும் கோவையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 5 சுற்றுகளாக இந்த போட்டியின் முதல் சுற்று ஜூன் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இறுதி சுற்று போட்டி அக்டோபர் மாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்படும். இந்த போட்டியின் மூலம் இரு வீராங்கனைகளை வெளிநாட்டுக்கு சிறப்பு பயிற்சி பெற அனுப்பும் திட்டமும் உள்ளது” என்று கூறினார்.
டிவிஎஸ் ரேஸிங் அணியின் தலைவர் அர்விந்த் பங்கான்கர் கூறும்போது, ‘இந்தியாவில் இரு சக்கர வாகன ரேஸிங்-ஐ முன்னிலைப்படுத்தி பிரபலமாக்குவது, அதன் மீது ஆர்வத்தை உருவாக்குவதில் டிவிஎஸ் ரேஸிங் உறுதியேற்றுள்ளது. எனவே இந்தியாவில், ரேஸிங் வீராங்கனைகளுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்க அலிஷா அப்துல்லா ரேஸிங் அகாடமிக்கு ஆதரவளிக்கிறோம்” என்று கூறினார்.
இந்த பைக் ரேஸில் ஹரிதா, ரேணுகா, ரம்யா (பெங்களூரு), ஒலிஷியா (கோவா), பிரதிக்ஸா (மும்பை), ஹர்ஸினி (ஐதராபாத்), சத்யா, பிரதிபா, லட்சுமி, துளசி, பிரியங்கா, வர்ஷா, ஹைடி சுஸ்மி (சென்னை), யாமினி (சேலம்), ஐஸ்வர்யா (கோவை) ஆகிய வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary : Women’s bike race in Chennai.