kamal-4112015இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து வந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள், தேசிய விருது பெற்ற திரையுலகினர் சிலர் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பித்தரும் நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1982ஆம் ஆண்டு ‘ஏழாவது மனிதன்’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அருண்மொழி என்பவர் தான் பெற்ற விருதை திருப்பித்தரவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் நான்கு தேசிய விருதுகளை பெற்றவருமான உலக நாயகன் கமல்ஹாசன் விருதுகள் திருப்பி அளிப்பது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் ‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு பதிப்புக்கான ‘சீக்கடி ராஜ்ஜியம்’ என்ற படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கூறியதாவது, “சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா – பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்.

சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன். நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன். கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்றமாட்டேன், அது என் உரிமை. அவ்வளவுதான்.

விருதுகளை திருப்பித்த் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன.

விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான அடையாளச் செய்கையே அது. அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்.

நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். இந்த விஷயத்தில் பணத்தையும் கூட. நான் விருதுகளை திருப்பி அளிக்கலாம், ஆனால் என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம். நான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்துள்ளேன். என்னிடம் பணம் நிறைய இருந்தாலும் நான் அதனை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

படைப்புபூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று கூறினார்.
English summary-i wont return my awards says actor kamal