இந்திய கடற்படையில் அதிகளவு இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய கடற்படையை சேர்ந்த வீராங்கனைகள் வர்த்திகா ஜோஷி, பிரதீபா ஜாம்வால், சுவாதி, விஜயதேவி, பாயல் குப்தா ஆகிய ஐந்து பேர் ‘ஐ.என்.எஸ். மதே’ என்னும் இந்திய கடற்படைக்கு சொந்தமான பாய்மர படகில் 2017ஆம் ஆண்டு முதல் உலகைச் சுற்றி வர சிறப்பு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர். இதன் முன்னோட்டமாக இந்த ஐந்து பேர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பாய்மரப் படகு மூலம் கடந்த 9ஆம் தேதி புறப்பட்டு நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை துறைமுகம் வந்தனர். இந்த வீராங்கனைகளை கடற்படை தலைமை அதிகாரி (தமிழகம் மற்றும் புதுச்சேரி) அலோக் பட்நாகர் வரவேற்றார்.
சென்னையை அடுத்து இவர்கள் ஐந்து பேர்களும் அடுத்து கொச்சி சென்று அங்கிருந்து கோவா செல்கின்றனர். தங்களுடைய உலக பயணம் குறித்து வீராங்கனைகள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடற்படை வீராங்கனைகள் வரலாற்றில் முதல் முறையாக உலகை பாய்மர படகில் சுற்றி வர இருக்கிறோம். உலக பயணம் என்பதால் காலநிலைக்கு தகுந்தாற்போல பயணம் மேற்கொள்வது, உடல் மற்றும் மனதளவில் தயார்படுத்திக்கொள்வது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சி பெற்று இருக்கிறோம். இதுகுறித்து கமாண்டர்கள் திலீப் தோண்டே, அபிலாஷ் டோமி ஆகியோரிடம் ஆலோசனை பெற்றுள்ளோம். விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்த பயணத்தில் நாங்கள் எந்தவித சவால்களையும் சந்திக்கவில்லை. உலக சுற்றுப்பயணம் செல்வதற்கு எங்களை முழுமையாக தயார்படுத்திவிட்டோம் என்று நம்புகிறோம்.
எங்கள் பயணம் தொடங்கி திட்டமிட்டபடி முடிவடையும்போது, உலகை பாய்மர படகில் சுற்றி வந்த பெண்கள் என்ற பெருமை எங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 56 அடி நீளமும், 16 அடி அகலமும் கொண்ட ‘ஐ.என்.எஸ். மதே‘ பாய்மர படகில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. பாய் மரத்தின் உயரம் 21 மீட்டர் ஆகும். இதே பாய்மர படகில் கமாண்டர் திலீப் தோண்டே 2010-ம் ஆண்டிலும், லெப்டினென்ட் கமாண்டர் அபிலாஷ் டோமி 2012-ம் ஆண்டிலும் இந்தியாவில் இருந்து கடல் பயணம் செய்து உலகை சுற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: World Travelling 5 Sailing Boat Players reached Chennai Port.