தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய அரசியல் கட்சிகளிடம் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் ஓட்டு போடும் முக்கியத்துவத்தை உணர்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்திடும் விழிப்புணர்வு பிரசார ஏற்பாடு ஒன்றை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

ஓட்டு அளிக்கும் ஆர்வம் இளைஞர்கள் இடையே குறைவாகவே இருக்கிறது என்றும் குறிப்பாக 18 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு செய்து வருவதாகவும், கடந்த தேர்தல் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. எனவே இளைஞர்களின் ஓட்டுப்பதிவை அதிகரிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு பிடித்தமான பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு பிரசார வீடியோ ஒன்றை எடுக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

நடிகர் கார்த்தியை வைத்து ஏற்கனவே விழிப்புணர்வு வீடியோ எடுக்கப்பட்டு விட்டது என்றும் இந்த வீடியோ இன்னும் 10 முதல் 15 நாட்களில் இந்த வீடியோ வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், தினேஷ்கார்த்திக் மற்றும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் ஆகியோரை வைத்து வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான இளைஞர்களை கவர முடியும் என்று தேர்தல் ஆணையம் நம்பிக்கையுடன் உள்ளது. மேலும் இளம் வாக்காளர்கள் இடையே ஓட்டு அளிக்கும் ஆர்வத்தை அதிகரிக்க வீடியோ தகவல்களையும் அனுப்பி இருக்கிறது.

English Summary: Election Commission’s tries new way to file votes by youths.