ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக அவர்களுடைய மாத சம்பளத்தில் இருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி 12% ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என்றும், மாத சம்பளம் ரூ.15,000 பெறுபவர்களுக்கு கட்டாய பி.எப் இனி இருக்காது என்ற அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அமைத்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் கூறியபோது “ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வரை வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்கள் பங்களிப்பாக பிடிக்கப்படும் தொகையை முழுதும் ரத்து செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அதிகமாகும். எல்லா விதமான சம்பளதாரர்களுக்கும் பி.எஃப் ஒரே அளவில் பிடிக்கப்படுவதால் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் அதிக தொகையை பி.எஃப். பிடித்தத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தொழிலாளர் அமைச்சகம் மற்றும் வருங்கால வைப்பு நிதிய அதிகாரிகளிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து டீம்லிசின் துணைத்தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி கூறும்போது, “முறையான துறைகளில் ஒருவர் மாதம் ரூ.15,000 சம்பளம் பெறுகிறார் என்றால் இ.பி.எப், ஊழியர்கள் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் வகையில் 44.3% பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இதே மாதம் ரூ.55,000 சம்பாதிப்பவர்களுக்கு இந்தப் பிடித்தம் அவர்கள் சம்பளத்திலிருந்து வெறும் 8% மட்டுமே’ என்று கூறினார்.

இந்தப் பிடித்தங்களினாலேயே முறைசாரா துறைகளில் நுழையும் பணியாளர்கள் முறைசாரா ஊழியர் ஒப்பந்த முறைகளில் பணியாற்ற ஒப்புக் கொள்கின்றனர், காரணம் அவர்கள் டேக்-ஹோம் சம்பளம் அதிகமாக இருப்பதை விரும்புகின்றனர். தற்போது மத்திய அரசு 12% ஊழியர் பங்களிப்பு பி.எஃப். பிடித்தத்தை ரத்து செய்தால் முறைசார் துறைகளில் அதிக பணிகளை உருவாக்க முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

English Summary: Mandatory PF will be cancelled for those getting Salary of Rs.15,000 and below.