isro_rocket_launchஒரே ராக்கெட்டில் 29 செயற்கைக்கோள்களை இணைத்து அமெரிக்காவின் நாசா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாதனை ஒன்றை நிகழ்த்தியது. அமெரிக்காவை அடுத்து இந்தியா ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைக்கொள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

ஒரு ராக்கெட்டுக் வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை மட்டுமே இணைத்து இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2008ஆம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து அனுப்பப்பட்டன. இதுவே இஸ்ரோவின் சாதனையாக இருந்த நிலையில் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-34 ராக்கெட்டில் 22 செயற்கைகோள்களை இணைத்து அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து பணிகளும் வெற்றி அடையும் பட்சத்தில், இந்த ராக்கெட்டு விண்ணில் பாய்வதற்கான ‘கவுண்ட்டவுண்’ வரும் மே மாதம் தொடங்கும் என்றும் கவுண்ட்டவுன் தேதி மற்றும் நேரம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவர் கூறியதாவது:-

இஸ்ரோ சார்பில் இதுவரை 32 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 33-வது ராக்கெட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஜி என்ற ஒரு செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது.

அதன் தொடர்ச்சியாக இந்திய வரலாற்றில் முதன் முறையாக பி.எஸ்.எல்.வி.சி-34வது ராக்கெட் மூலம் 22 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மே மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது.

இஸ்ரோவை பொறுத்தவரை நமது நாட்டிற்கு மட்டுமின்றி, வெளிநாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்களையும் இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தும் பணியினை செய்து வருகிறது. அந்த வகையில் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படும் 22 செயற்கைகோள்களில் 18 செயற்கைகோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்ததாகும். மீதமுள்ள 4 செயற்கைகோள்கள் நமது நாட்டிற்கு சொந்தமானது.

அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் நமது இஸ்ரோ மூலம் செயற்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு மிக முக்கிய காரணம் குறைந்த செலவில் வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தப்பட்டு வருவது தான்.

இவ்வாறு அந்த விஞ்ஞானி கூறினார்.

English summary : 22 satellites in one rocket. ISRO is to create a record.