சென்னை பட்டினப்பாக்கம் கடல் பகுதியில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியால் ஏற்பட்ட பேரழிவை யாரும் மறந்திருக்க முடியாது. சுனாமிக்கும் பிறகும் அவ்வப்போது சென்னையில் கடல் உள்வாங்கிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணிக்கு சாந்தோம் தேவாலயத்தில் இருந்து பட்டினப்பாக்கம் வரை கடல் நீர் மெதுவாக உள்வாங்கியது. இரவு 8 மணி நிலவரப்படி 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை கடல் நீர் உள்வாங்கியிருந்ததாகவும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு அடி வீதம் கடல் நீர் உள்வாங்கியதாகவும் அந்த பகுதியினர் தெரிவித்தனர்.

கடல் நீர் உள்வாங்கியது குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைக்கு வந்து உள்வாங்கிய கடலை ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். மீண்டும் சுனாமியின் கோரத்தாண்டவம் வந்துவிடுமோ என்ற அச்சம் அவர்களின் முகங்களில் தெரிந்ததை காண முடிந்தது.